முகப்பு வந்தவாசி செய்திகள்

  திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக அறிவித்தது தமிழக அரசு!

  443

  திருவண்ணாமலையை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை காலத்தில் மேற்கொள்ளப்படும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டி விவரம் வருமாறு:

  குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 4,267 சிற்றூர்களில் 3,586 குக்கிராமங்களுக்கு தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
  681 குக்கிராமங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது. 18 ஊராட்சி ஒன்றியங்கள், 860 கிராம ஊராட்சிகள், 4,267 சிற்றூர் பகுதிகளைக் கொண்ட 1,389 குக்கிராமங்களில் வாழும் தனி நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 40 முதல் 55 லிட்டர் தண்ணீரும், 2,878 குக்கிராமங்களில் வாழும் தனி நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 55 லிட்டருக்கும் மேலான தண்ணீரும் தினமும் வழங்கப்படுகிறது.
  ஊரகப் பகுதிகளில் 11,449 கைப்பம்புகள், 5,115 மின்விசைப் பம்புகள், 8,396 சிறு மின்விசைப் பம்புகள், 4,772 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஊரகப் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. 27 கூட்டுக் குடிநீர் வழங்கும் திட்டங்கள் மூலம் 259 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
  ரூ.31.09 கோடியில் குடிநீர் பணிகள்: கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி போர்க்கால அடிப்படையில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 14-ஆவது நிதிக்குழு மானிய நிதி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதி, உபரி நிதி ஆகியவற்றின் மூலம் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுகளை தூய்மை செய்தல், ஆழப்படுத்துதல், மின் மோட்டார் திறனை அதிகரித்தல், புதிய திறந்த வெளிக் கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துதல் என 1,159 குடிநீர்ப் பணிகள் ரூ.31.09 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  இவற்றில் 684 குடிநீர்ப் பணிகள் முடிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

  மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் 9 பேரூராட்சிகளில் தினமும் ஒரு நபருக்கு 70 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் மட்டும் 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. 6 பேரூராட்சிகளில் ரூ.51.02 லட்சத்தில் 13 குடிநீர் திட்டப் பணிகள் முடிவுற்று குடிநீர் வழங்கப்படுகிறது.

  திருவண்ணாமலை நகராட்சியில் தினமும் ஒரு நபருக்கு 121 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆரணி, செய்யாறு, வந்தவாசி நகராட்சிகளில் ஒரு நபருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் முறையே 85 லிட்டர், 82 லிட்டர், 79 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நகராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.1.34 கோடியில் 17 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  எச்சரிக்கை: குடிநீர் இணைப்பில் மின் மோட்டாரை வைத்து தண்ணீரை உறிஞ்சுதல், அனுமதியின்றி தண்ணீர் எடுத்தல் போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான முறைகேடுகள் கண்டறியப்பட்டால், உடனடியாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும் என்றார் அவர்.

  பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜி.அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

  புகார் தெரிவிக்க அழைப்பு

  குடிநீர் வழங்கல் தொடர்பான பிரச்னைகள் குறித்த புகார்களை மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 04175-233141, 233303 என்ற எண்களிலும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநரை 7373704206 என்ற எண்ணிலும், திருவண்ணாமலை கோட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநரை 7402606611 என்ற எண்ணிலும், செய்யாறு கோட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநரை 7402903703 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.