முகப்பு தமிழகம்

வங்கி கடனை அடைத்து கல்லூரியை மீட்போம்: பிரேமலதா விஜயகாந்த்

13

வங்கி கடனை கட்டாததால், கல்லூரி மற்றும் வீடு ஏலத்துக்கு வந்துள்ள நிலையில், விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் கல்லூரி ஏலத்துக்கு வந்திருக்கிறது என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாங்கள் வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அதனால், 2 மாதம் காலஅவகாசம் வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திடம் ஏற்கனவே கேட்டிருந்தோம்.

ஆனால், அவர்கள் போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்த பிரச்சினையை சட்டரீதியாக நாங்கள் கையில் எடுத்து தீர்வு காண்போம்.

தற்போதைய என்ஜினீயரிங் கல்லூரிகளின் நிலைமை உங்களுக்கு தெரியும். மேலும்… மேலும்… கல்லூரிகளை புதிதாக திறக்க அனுமதி கொடுக்கப்படுவதும், என்ஜினீயரிங் படித்தால் வேலைவாய்ப்பு இல்லை என்ற தகவல் பரப்பப்படுவதாலும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அதனால், என்ஜினியரீங் கல்லூரிகளை நடத்துவதே கஷ்டமாக இருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான்.

இது ரூ.5 கோடி கடன் பிரச்சினை. பொதுவாக, நேர்மையாக நடப்பவர்களுக்கு சோதனைகள் வரும். இந்த சோதனையில் நாங்கள் வெற்றி பெறுவோம். சட்டத்தை மதிப்பவர்கள் நாங்கள். சட்டரீதியாக இந்த பிரச்சினையில் இருந்து நாங்கள் வெளியே வருவோம். முன்பு விஜயகாந்த் சினிமாவில் நடித்தார், இப்போது நடிக்கவில்லை. எங்கள் கல்யாண மண்டபமும் இடிக்கப்பட்டுவிட்டது. எனது மூத்த மகன் இப்போது தான் தொழில் தொடங்கியிருக்கிறார். இளைய மகன் சினிமாவில் இப்போது தான் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதனால், எங்களுக்கு வருமானம் குறைந்துபோய் உள்ளது. என்றாலும், கஷ்டப்பட்டாவது இந்த கடனை அடைத்து கல்லூரியை மீட்போம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.